×

தாடகை மலை ராகவேஸ்வரர்

நாகர்கோவில் அருகே உள்ளது தெரிசனங்கோப்பு. இந்த ஊரின் வரலாறு ராமாயணத்துடன் இணைந்து பேசப்படுகிறது. ராமன் தாடகையை வதம் செய்தபோது, வில்லை ஊன்றி நின்ற இடம் இவ்வூர் எனும் வரலாற்று கதை உள்ளது. இதனால் இந்த ஊரின் அருகே உள்ள மலைக்கும் தாடகை மலை என்று பெயர் காரணம் சொல்கிறார்கள். இந்த ஊரில் பழமை வாய்ந்த ராகவேஸ்வரர் கோயில் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அழகியபாண்டிபுரம் சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது.  

தாடகையை வதம் செய்தபின் தோஷம் நீங்க, இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை ராமன் வழிபட்டான் என்று கூறுகிறார்கள். இங்குள்ள இறைவி லோகாம்பாள், லோகநாயகி என்றும் அழைப்பார்கள். இங்கு சிவன், அம்பாளுக்கு தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. கோயிலை சுற்றி பெரிய மதிற்சுவர்கள் உண்டு. கோயிலின் முன் பகுதியில் சிறு கோபுரம் உள்ளது. இதில் கேரள முறைப்படி ஓட்டுக்கூரை அமைந்துள்ளது. பலி பீடம் மற்றும் கொடி மரம் சிவன் சன்னதி முன் உள்ளன.

பெரிய வளாகத்தில் இருக்கின்ற சிவன், அம்மன் சன்னதிகள் தரைமட்டத்தில் இருந்து இரண்டரை மீட்டர் உயர மேடையில் உள்ளன. திருக்கோயில்களை சுற்றிவர தனித்தனியே கல்தளம் உண்டு. இது பிற கோயில்களில் காணப்படாதது. இந்த கோயில் சமதரையில் இருந்து உயர்ந்து இருப்பதற்கு தல புராணத்தில் காரண கதைகள் இல்லை என பெரியவர்கள் கூறுகிறார்கள். பழையாற்றில் நீர் பெருக்கெடுக்கும்போது, இக்கோயில் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கோயில் உயரமான மேடையில் அமைந்து இருக்கிறது என்பார்கள்.

சிவன் கோயிலின் முன் மண்டபத்தில் ஏறி செல்ல வடக்கிலும், தெற்கிலும் எட்டு படிகள் உள்ளன. நேர்க்கிழக்கில் படிகள் இல்லை. முன் மண்டபத்தை அடுத்து எட்டு தூண்கள், கொண்ட முக மண்டபம் அமைந்துள்ளது. அர்த்த மண்டப வாசல் இதன் தென் பகுதியில் உள்ளது. வடக்கே விழாக்கால படிமங்களும், வழிபாடு படிமங்களும் உள்ளன. இம்மண்டப தூண்களில் சிற்பங்கள் இல்லை.  கருவறையின் சுவர் பகுதி சோழர் கட்டுமான முறையை பின்பற்றி நடந்து இருப்பது இதன் பழமையை உணர்த்துவதாக உள்ளது.

கோயில் வெளிப்பிரகாரத்தில் நிறைய வில்வ மரங்கள் உள்ளன. அரச மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களும், கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன.  பிரகாரத்தை சுற்றி வந்தாலே மிகப்பெரிய நிம்மதி கிடைப்பதை உணர முடியும். இந்த கோயிலில் அம்மன் சன்னதிமுன் சிறு முன் மண்டபம் உள்ளது. இதை வாகன மண்டபம் என்கிறார்கள். கோயில் வாகனங்கள் இங்கே உள்ளன. இந்த முக மண்டபத்தை அடுத்து ஆறு தூண்கள் கொண்ட அர்த்த மண்டபம் அமைந்துள்ளது. இதன் வட பகுதியில் பள்ளியறை அமைந்துள்ளது. பள்ளியறையில் தினமும் ஸ்ரீபாதம் வைக்கப்படும்.
 
மூலவர் சிவன் லிங்க வடிவினர். அம்மன் நின்ற கோலம். இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி தர்ம சாஸ்தா கோயில் மற்றும் நாகரும் உண்டு. சிவன் கோயிலின் முன் மண்டபத்தில் வடக்கில் தெற்கு நோக்கி பைரவர் அமைந்துள்ளார். இரண்டு கைகள், ஒரு கையில் சூலம் உண்டு. உட்பிகாரத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி, கன்னி மூலையில் விநாயகர், கிழக்கு நோக்கி நவநீத கிருஷ்ணன், வடக்கு பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். சண்டிகேஸ்வரர், பூதத்தான் போன்ற பரிவார தெய்வங்களும் உள்ளன.

சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் கொடியேற்றி 10 நாட்கள் திருவிழா நடக்கும். பவுர்ணமியில் ஆறாட்டு. 9ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். காலை 5.30க்கு அபிஷேகம் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு திருநடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை 6.30க்கு சாயராட்சை பூஜை, இரவு 7 மணிக்கு பள்ளியறை பூஜை, இரவு 7.30க்கு நடை சாத்தப்படும்.

Tags : Jadhav Mountain Raghaveshwara ,
× RELATED வானில் ஓர் உரையாடல்